வவுனியாவில் 24 மணி நேரத்தில் வெளியாகும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்!

வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கோவிட் – 19 பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் வெளியாகுவதற்குரிய நடவடிக்கைகள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க மாகாண சுகாதார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் இதுவரையிலான காலமும் மேற்கொள்ளப்பட்ட கோவிட் – 19 பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ்ப்பாணம் , அனுராதபுரம் , கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மூன்று நாட்களிலிருந்து ஏழு நாட்கள் வரையிலான காலப்பகுதியில் முடிவுகள் வெளியாகின.

இதன் காரணமாக கோவிட் தொற்றாளர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்துவது போன்ற பல இன்னல்களை சுகாதார பிரிவினர் எதிர்நோக்கியிருந்தனர்.

கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வவுனியா மாவட்டத்தில் சமூக மட்டத்திலான கோவிட் மரணங்கள் பதிவாக தொடங்கியுள்ளமை பல எண்ணிக்கையான தொற்றாளர்கள் சமூகத்தில் காணப்படுவதை உறுதிப்படுத்துவதாக தொற்றுநோய் துறை வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் நாளாந்தம் 130 நபர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு 24 மணிநேரத்தில் முடிவுகளை பெறுவதற்குறிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பிராந்திய சுகாதாரதுறை இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போதுமானளவு பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது மாவட்ட மக்களின் கோவிட் தொற்று நிலையை எதிர்வு கூறவும் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.