கிளிநொச்சியில் இயங்கிவரும் சதொச விற்பனை நிலையம் அரச ஊழியர்களுக்கு மாத்திரமே பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி?

கிளிநொச்சியில் இயங்கிவரும் சதொச விற்பனை நிலையம் அரச ஊழியர்களுக்கு மாத்திரமே பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி தருகின்றது.

சாதரண மக்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்காமையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதோடு குறித்த விடயத்தினை கேட்க சென்ற ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்காமல் குறித்த சதொச நிர்வாகம் நடந்துள்ளது.

​மேலும் கிளிநொச்சியின் காவல்துறை உதவி அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பெயரிலேயே அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டும் பொருட்களை தாங்கள் வழங்குவதாக சதொச முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

​ஆனால் இது குறித்து கிளிநொச்சி காவல்துறை உதவி அத்தியட்சகரிடம் கேட்ட போது கிளிநொச்சி சதொச நிறுவனத்துக்கு எந்தவித அறிவுறுத்தலையும் தான் கொடுக்கவில்லை என்றும் அது தனது வேலை இல்லை என்றும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் உட்பட அரசாங்கத்தின் உரிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டது .

பயணத்தடை காலத்தில் மக்கள் பல இன்னல்களை சந்திக்கும் நேரத்தில் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையம் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களையும் மீறி பாரபட்சமாக நடந்துகொள்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.