ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை!

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட இலங்கையில் உள்ள 6 இணையத்தளங்கள் மீது எவ்வித இணைய வழி தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த இணையத்தளங்கள் செயலிழந்திருந்ததாக அந்த அணி மேலும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, போலியான தகவலை பகிர்ந்த இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்ட மெத்தீவிடம் விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 6 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட இலங்கையில் உள்ள 6 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட மேலும் சில இணையத்தளங்கள் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன என இலங்கை விமானப்படையின் இணைய பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த இணையத்தளங்களை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று முன்தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் www.mahindarajapaksa.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் மீதும் சைபர் தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.