வவுனியா சகாயமாதாபுரம் பகுதியில் 25 பேருக்கு கொரோனா

வவுனியா, சகாயமாதாபுரம் பகுதியில் 25 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் கிராமத்திற்குள் உள்நுழைய மற்றும் கிராமத்தில் இருந்து வெளியேற தடை விதித்து கிராமத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக 11 கோவிட் தொற்றாளர்கள் வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியில் இனங்காணப்பட்ட நிலையில், அப் பகுதியில் நேற்று (04.06) மேற்கொள்ளப்பட்ட எழுமாறான 20 அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (05.06) மேலும் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பது அன்டிஜன் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் குறித்த கிராமத்தில் 25 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த கிராமத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கிராமத்தில் இருந்து வெளியேறவும், கிராமத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், கிராமத்தின் பிரதான வீதிகள், உள் வீதிகள் என்பன போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டு கிராமத்தைச் சுற்றி பொலிசார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா திருநாவற்குளம் கிராமமும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவ்வாறு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.