இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை : 7 பேர் பலி

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

சீரற்ற காலநிலையினால் 41 ஆயிரத்து 717 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மாவனெல்ல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரில் 16 வயதான யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தந்தை, தாய், மகன் ஆகியோர் மண்மேட்டிற்குள் சிக்குண்டுள்ளனர்.

இராணுவத்தின் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்தும் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது.