மக்கள் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துவிட்டு மாயமான கனேடியர்!

கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரி ஒருவர் உயிரிழந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. வான்கூவரை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான QuadrigaCXஇன் தலைமை செயல் அதிகாரி Gerald Cotten.

இந்தியாவுக்கு தேனிலவுக்குச் சென்ற Gerald உயிரிழந்ததாக வெளியான தகவலால், நிறுவனத்தில் முதலீடு செய்த 215 மில்லியன் டொலர்கள் என்ன ஆனது என்ற விடயம் வெறும் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. ஒரு காலகட்டத்தில் கிரிப்டோகரன்சி என்னும் விடயம் பரபரப்பாக பேசப்பட்டபோது, மக்கள் அந்நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

மக்களுடைய பணம் 215 மில்லியன் டொலர்கள் நிறுவனத்தில் சேர்ந்த நிலையில், தனது தேனிலவுக்காக தனது மனைவி Jennifer Robertsonஉடன் இந்தியாவுக்கு சென்றார் Gerald. ஆனால், அவர்கள் இந்தியா சென்று ஒரு மாதம் ஆன நிலையில், Gerald உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக அவரது மனைவி அறிவித்தார்.

Geraldஇன் கணினியை அவரது மனைவியால் கூட இயக்க முடியாமல் போன நிலையில், அவரது நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட மக்கள் பணம் 215 மில்லியன் டொலர்கள் முடங்கிப்போனது.

அந்த பணத்தை எப்படி மீட்பது என தெரியாமல் மக்கள் குழம்பிப்போனார்கள். இன்று வரை அந்த பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் புதிதாக ஒரு கேள்வி எழுந்தது.

இதேபோல் பணம் முடங்கிய சில குற்ற வழக்குகளில், குற்றவாளி இறந்ததாக பொய்யான ஒரு தகவலை பரப்பிவிட்டு சம்பந்தப்பட்டவர் அந்த பணத்துடன் மாயமான சம்பவங்கள் நடந்துள்ளன. ஆக, அதேபோல் Geraldம் இந்தியாவுக்கு போனபோது இறந்ததாக பொய்யான தகவலை பரப்பிவிட்டு வேறெங்காவது போய் தலைமறைவாகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், மக்கள் பணத்தில் Gerald ஆடம்பரமாக வாழ்ந்ததாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவர் தன் ஆடம்பர வாழ்வுக்காக பல மில்லியன்கள் செலவு செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளதுடன், கூடவே, QuadrigaCX நிறுவனத்தின் சக நிறுவனரான Michael Patryn என்பவர் ஒரு குற்றப்பின்னணி கொண்டவர் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

Michael அடையாளத் திருட்டுக் கும்பல் ஒன்றுடன் தொடர்பில் இருந்ததற்காக அமெரிக்காவில் சிறையிலிருந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Gerald இந்தியா சென்றபோது உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், அவர் உண்மையாகவே உயிரிழந்தாரா, அல்லது தங்கள் பணத்தைச் சுருட்டிக்கொண்டு எங்கேயாவது தலைமறைவாகிவிட்டதா என்பதை அறிவதற்காக, Geraldஇன் உடலை தோண்டி எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரியிருக்கிறார்கள்.