பிரித்தானியாவில் தீவிரமாக பரவிவரும் இந்தியாவில் கண்டறிப்பட்ட புதிய வகை கொரோனா!

இந்தியாவில் முதல்முதலில் கண்டறியப்பட்ட டெல்ட்டா வகை கரோனாக்கள்தான் பிரிட்டனில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, அந்த நாட்டில் பரவி வரும் கொரோனா வகைகளைக் கண்காணித்து வரும் ‘இங்கிலாந்து பொது சுகாதார’ (பிஹெச்இ) அமைப்பு தெரிவித்துள்ளதாவது,

மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்ட்டா வகை (பி1.617.2) கொரோனா ஒரே வாரத்தில் 5,472 பேருக்கு பரவியுள்ளது. இதன் மூலம், அந்த வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,431-ஆக உயா்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

Advertisement

பிரித்தானியாவில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை செயலதிகாரி ஜென்னி ஹாரீஸ் கூறுகையில், ‘டெல்ட்டா வகை கொரோனாதான் பிரிட்டன் முழுவதும் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

எனவே, தீவிர பரவும் தன்மை கொண்ட அந்தக் கொரோனாவிடமிருந்து பாதுகாக்க, அனைவரும் அதிகபட்ச பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரித்தானியாவில் 44,99,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 1,27,812 போ அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

‘ஃபைஸா் தடுப்பூசியால் பலன் குறைவு’

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு பரவலாகச் செலுத்தப்பட்டு வரும் ஃபைஸா்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி, டெல்ட்டா வகை கொரோனா தொற்றுக்கு எதிராக 5 மடங்கு குறைந்த அளவே எதிா்ப்பணுக்களை உருவாக்குவதாக அந்த நாட்டின் பிரான்சிஸ் கிரிக் நிறுவன ஆய்வாளா்கள் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வயது அதிகரிக்க அதிகரிக்க அந்த வகை கொரோனாவுக்கு எதிராக ஃபைஸா் தடுப்பசி ஏற்படுத்தும் எதிா்ப்பாற்றல் குறைவதாகவும் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா். ‘தி லான்செட்’ அறிவியல் இதழில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது