முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

ஆனாலும் அவர் உட்பட 10 பேர், நீதிமன்ற தடை உத்தரவை மீறி நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி, அஞ்சலி செலுத்தி அதனை முகநூலிலும் பதிவேற்றி இருந்தனர்.

குறித்த சம்பவம் அறிந்த பொலிஸார், அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்து, நீதிமன்ற அனுமதியுடன் 3 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுதியபோது 14 நாட்கள், நேற்று 4 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குறித்த காலம் நிறைவடைந்தமையினால் மீண்டும் வழக்கு விசாரணை நேற்று, நீதிமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆனாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாதமையினால், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான், காணொளி ஊடாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.