கொங்கோவில் இடம்பெயர்வு முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு: 57பேர் பலி

கிழக்கு ஜனநாயக கொங்கோ குடியரசில் (டி.ஆர்.சி), ஏ.டி.எஃப். கிளர்ச்சிப்படை நடத்திய தாக்குதலில், 57 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கிழக்கு இடூரி மாகாணத்தில் கடந்த 31ஆம் திகதி இடம்பெயர்வு முகாம்களில் இந்த கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அண்டை நாடான உகாண்டாவிலிருந்து வெளியேற்றப்பட்ட, நேச நாட்டு ஜனநாயகப் படைகளின் (ஏ.டி.எஃப்) குழுவின் போராளிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல், கிழக்கு இடூரி மாகாணத்தில் பல இடப்பெயர்வு இடங்களை விட்டு வெளியேற 5,800 பேரை கட்டாயப்படுத்தியதாக ஐ.நா. அகதிகள் அமைப்பான யு.என்.எச்.சி.ஆர் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் போகா மற்றும் த்சாபி நகரங்களுக்கு அருகிலுள்ள இடம்பெயர்வு முகாம்கள் மற்றும் கிராமங்களில் புகுந்து ஏ.டி.எஃப். கிளர்ச்சிப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில், ஏழு குழந்தைகள் உட்பட 57 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என யுஎன்ஹெச்சிஆர் செய்தித் தொடர்பாளர் பாபர் பலோச் ஜெனீவாவில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் மற்றும் 25 பேர் கடத்தப்பட்டனர்.

அதே நேரத்தில் 70க்கும் மேற்பட்ட தங்குமிடங்கள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. போகா நகரில் மட்டும் 31 பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் கொல்லப்பட்டனர்’ என கூறினார்.