தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் கொவிட் தொற்றுறுதியானால், உயிரிழப்பு நிகழாது!

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் கொவிட் தொற்றுறுதியானால், உயிரிழப்பு நிகழாது என இந்தியாவின் எய்ம்ஸ் வைத்தியசாலை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தின்கீழ் கோவிஷீல்ட், கோவெக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்த 2 தடுப்பூசிகளில் ஏதாவதொரு தடுப்பூசியை ஒருவர் செலுத்திக் கொண்டால், முதல் தடுப்பூசி செலுத்தி குறித்த கால இடைவெளிக்குள் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

எனினும் ஒரு தடவை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமல்லாது இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே தடுப்பூசி செலுத்திய பின், கொரோனா தொற்று உறுதியானாலும் அவர்கள் உயிரிழக்க மாட்டார்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வுக்காக 2 தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட பின் கொவிட் தொற்றுறுதியான 36 பேரும், ஒரு தடுப்பூசி செலுத்திய பின் கொவிட் தொற்றுறுதியான 27 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களில் 10 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், எஞ்சியவர்கள் கோவெக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாவர்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் 21 முதல் 92 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அதில் எவரும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயால் பீடிக்கப்படாதவர்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இவர்களது ஆய்வு முடிவு குறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்றுறுதியானதுடன், அவர்களுக்கு காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை இருந்துள்ளது.

இது தடுப்பூசி போடாமல் கொரோனா பாதித்தவர்களின் நிலைக்கு சமமானதாகும்.

தொற்றாளர்களின் உடலில் தடுப்பூசியினால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தாலும், தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

ஏனைய தொற்றாளர்களை போன்று வைத்தியசாலையில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டாலும் எவரும் மரணிக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.