கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட நபர் பொலிஸ் வாகனத்திலிருந்து பாய்ந்து மரணம்!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட நபர் பொலிஸ் வாகனத்திலிருந்து குதித்து தப்ப முயன்றபோது படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பாணந்துறை – வத்தல்பொல பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே உயிரிழந்திருக்கின்றார். தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக குறித்த நபர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு கைதான நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் வேளையில் அவர் தப்பிக்கும் நோக்குடன் பொலிஸ் வாகனத்திலிருந்து வெளியில் குதித்து காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

காயங்களுக்குள்ளான நிலையில் அவரை பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.