போலி செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை!

சமூக வலைத்தளங்களில் போலி செய்திகளை பரப்புதல் மற்றும் மீள்பதிவிடல் செய்பவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினர் இதற்கான விசேட கண்காணிப்பினை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளினால் பொது மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவ்வாறான போலி செய்திகளினால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றதோடு கொவிட் வைரஸ் மற்றும் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் போலி செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்கள் மற்றும் அவற்றை மீள்பதிவிடும் நபர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் உள்ள கணணி குற்றப்பிரிவு இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

யாரேனும் போலியான தகவலை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவாராயின் அது பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் 98 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குறிய குற்றமாகும். எனவே சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குற்றப்புலனாய்வு பிரிவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து சமூக வலைத்தளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.