இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் கைது!

இலங்கை தகவல் தொழில்நுட்ப (ITSSL) சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்ட மெத்தீவ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அண்மையில் ஜனாதிபதி செயலக வலைத் தளம் உட்பட பல அரச வலைத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி போலியான செய்திகளை பரப்பிய குற்றச்சாட்டுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

அத்தோடு கணினி குற்றச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்ட அவர் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

மேலும் ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தின் 6 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறி இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

எவ்வாறாயினும், குறித்த இணையளத்தளங்கள் மீது எந்தவொரு இணையவழி தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் தொழிநுட்ப கோளாறே ஏற்பட்டிருந்தது என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி பின்னர் தெரிவித்தது.