கிளிநொச்சி பகுதியில் இரண்டு மாத குழந்தைக்கு கோவிட் தொற்று!

கிளிநொச்சி – கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தர்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தைக்கு கோவிட் தொற்றுள்ளமை நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தந்தை கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுபவர் என்றும் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் குழந்தைக்கு ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் குழந்தைக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தாய்க்கு ஆன்டிஜென் பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்த போதும் அவருக்கு இருக்கும் அறிகுறிகள் தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 14 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.