வவுனியா வடக்கில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளடங்களாக 74 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் பேரூந்துகள் மற்றும் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு வவுனியா வடக்கு புளியங்குளம் பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்று(புதன்கிழமை) காலை வவுனியா வடக்கு புளியங்குளம் பகுதியில் வைத்து ஆடைத்தொழிற்சாலைக்கு பேரூந்தில் பயணித்த ஊழியர்கள், புளியங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் தங்கி இருந்தவர்களுக்கே இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆடைத்தொழிற்சாலைக்கு பேரூந்தில் செல்பவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பயணிக்கிறார்களா? வர்த்தக நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பேணுகின்றார்களா? என்பதையும் அவதானித்திருந்ததோடு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், வர்த்தக நிலையத்தில் தங்கி இருந்தோர் என 74 பேருக்கு பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனை வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி. திலீபன் தலைமையில் சுகாதார பரிசோதகர்களான க. மேஜெயா, எஸ். நிசாந்தன், எஸ். சாருஜன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.