தரம் 1 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சி கல்வி அறிமுகம்!

​தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன பாடசாலை மாணவர்களுக்கு வீட்டிலேயே பாடநூல்களை விநியோகிப்பதற்கும், அதனூடாகப் பாடத்திட்டங்களை முடிப்பதற்கும் புதிய திட்டமொன்றை ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூர கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து கல்வியாளர்களால் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இது மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றலைத் தொடரும் நடவடிக்கைகளில் ஈடுபட உதவும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

கொழும்பில் உள்ள இலங்கை மக்கள் முன்னணி கட்சி தலைமையகத்தில் நேற்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.


வீட்டிலுள்ள மாணவர்கள் மற்றும் வீடுகளில் உள்ள ஆசிரியர்கள் ஆகிய இரு தரப்பையும் ஒன்றிணைத்து இந்த பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு ஏற்கனவே தேசிய கல்வி ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார். இதனுடன் வாராந்த மதிப்பீட்டு முறையொனறு அமல்படுத்தப்படும் என்றும், பாடசாலைகள் மீண்டும் தொடங்கப்பட்ட பின்னரும் இந்த பயிற்சிப் புத்தகங்களின் விநியோகம் தொடரும் என்றும் அவர் கூறினார்.


ஆகஸ்ட் ஆரம்பம் முதல் இந்த திட்டம் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்ததாவது,


முதலாம் வகுப்பு முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூபாவாஹினி மூலம் கல்வி வழங்கும் திட்டத்தையும் நாங்கள் ஆரம்பிக்கிறோம்.


அதன்படி, இந்த மாணவர்கள் அனைவருக்கும் ஒரு தொலைக்காட்சி சேனலை அறிமுகப்படுத்துவோம். தற்போது, ​​பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இதை விரைவில் தொடங்கினால், முழு பாடத்திட்டத்தையும் தொலைக்காட்சியில் அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமான வகையில் முடிக்க முடியும். இலங்கையில் 95 சதவீத வீடுகளில் தொலைக்காட்சி உள்ளது. இந்த தொற்றுநோயை எதிர்கொண்டு இந்த சவாலை நாம் சமாளிக்க முடியும் என்று நம்புகிறோம். எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து எங்கள் மாணவர்களின் கற்றல் செயல்முறையை முன்னோக்கி கொண்டு செல்ல நாங்கள் தற்போது ஒன்லைன் முறையைப் பயன்படுத்துகிறோம். விமர்சனங்களும் தடைகளும் வருகின்றன. எனினும் நாங்கள் எமது மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.​