இலங்கைக்கு வந்துள்ள அடுத்த ஆபத்து ‘அல்பா கொரோனா பல இடங்களில் அடையாளம்!

இந்தியாவில் புதிய திரிபாக மாறிவரும் பி.1.617.2 (டெல்டா) எனும் ‘அல்பா கொரோனா’ தொற்றுக்குள்ளான ஒருவர், தனிமைப்படுத்தல் மத்திய நிலையமொன்றிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர, இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட குறித்த கொரோனா தொற்றுக்குள்ளாகி, இலங்கையில் இனங்காணப்பட்ட இரண்டாவது நபர் என்றார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர்,

“இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் மரபணு வரிசைமுறை தொடர்பான புதிய ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன், மிகவும் வேகமாகப் பரவி வரும் பிரித்தானியாவின் கென்ட் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட பி.1.1.7 அல்பா தொற்று கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாப்பிட்டி, வாரியபொல, மாத்தறை, ஹபராதுவ, திஸ்ஸமாஹாராம, கராப்பிட்டிய, ராகம ஆகிய இடங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார். அதேபோல பி.1.411 கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் திஸ்ஸமஹாராம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் சிலருக்கு அல்பா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக்கொண்டவர்கள் என்பதுடன், இவர்கள் அனைவரும் தற்போது சுகமடைந்துள்ளனர் என்றார்.

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட ஆல்ஃபா தொற்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வது அவசியம் என்பதுடன், சுகாதாரத் தரப்பினரின் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் தற்போது செலுத்தப்படும் 3 வகையான தடுப்பூசிகளும் அல்பா தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.