யாழில் இரண்டு வல்லரசுகளின் ஆதிக்கத்தால் பனிப்போர் ஏற்படும் அபாயம் – அனந்தி எச்சரிக்கை

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ள நிலையில் அதனை சீனா தான் வாங்குவதற்கு முயற்சி செய்யும். பலாலி விமான நிலையத்தினை இந்தியா அபிவிருத்தி செய்கிறது. காங்கேசன்துறைக்கும் பலாலிக்கும் இடையே அண்ணளவாக 4கி லோமீட்டர்கள் தூரம் தான் இருக்கும்.

இதனால் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளினதும் ஆதிக்கம் அருகருகே உள்ளதனால் யாழில் ஒரு பனிப்போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அண்மையில் நாடாளுமன்றில் துறைமுக அபிவிருத்தி சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் பல பிரதேசங்கள் அந்நிய முதலீடுகளுக்காக விற்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதேநேரம் கொரோனாவினுடைய பெருந்தொற்றினை தடுப்பது எனக்கூறி அரசு, மக்களை பல வாரங்களாக முடக்கி வைத்திருக்கின்ற ஒரு நிலையில் இந்த அரச சொத்துக்கள் அந்நிய முதலீடுகளை ஏற்படுத்துவதற்கு விற்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில் கொழும்பு பகுதியில் பல இடங்கள் சீனாவுக்கு விற்கப்பட்டுள்ள நிலையில் காங்கேசன்துறையில் அமைந்துள்ள அரச சொத்தான ஜனாதிபதி மாளிகையும் அந்நிய முதலீடுகளுக்கு விற்பதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிய முடிகிறது.

ஏற்கனவே வலிகாமம் வடக்கு மக்கள் 1990களில் வெளியேற்றப்பட்ட பின்னர் அந்த நிலங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, 90களுக்கு முதல் காங்கேசன்துறையில் இயங்கிய ஆறு மீன்பிடித் துறைமுகங்களும் இன்றுவரை விடுவிக்கப்படாத நிலையில் காங்கேசன்துறையில் ஜனாதிபதி மாளிகை என்ற பெயரில் ஒன்றினை அமைத்துவிட்டு அதனை அரச சொத்தாக கருதி விற்பதற்கு தயாராக இருக்கின்றார்கள்.

இந்த சொத்துக்களின் விற்பனை முகவராக அரச நிறுவனமான சிலந்தீவ என்ற நிறுவனம் தொழிற்படுகிறது. கொரோனா தொற்றின்காரணமாக நாட்டினை முடக்கத்தில் வைத்துக்கொண்டு, வடக்கு மக்களுடைய எந்தவிதமான விருப்பமும் இல்லாமல் இவ்வாறு விற்பனை செய்ய அரசு முயற்சிக்கும் போது அதனை என்ன விலை கொடுத்து வாங்குவதற்கும் சீனா தயாராக உள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த தாக்கத்தில் இருந்து விடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் அரசு மீண்டும் யாழில் சொத்துக்களை விற்பதன் மூலம் இரண்டு வல்லரசு நாடுகளின் பனிப்போருக்குள் மக்களை சிக்குவதற்கு ஏற்பாடு செய்கின்றது.

எனவே அரசின் இந்த செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பலம் பொருந்தியதாக காணப்படும் எதிர்க்கட்சி வீதியில் இறங்கிப் போராட வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.