வவுனியா நகரில் பயணத்தடையை மீறி வீதியில் பயணித்தவர்களுக்கு பிசீஆர் பரிசோதனை!

வவுனியா நகரப் பகுதியில் வீதியில் பயணித்தவர்கள் சுகாதாரப் பிரிவினரால் வழிமறிக்கப்பட்டு அவர்களுக்கு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக வவுனியா நகரில் மணிக்கோபுர சந்திக்கு அண்மையில் இன்று (11.06) மதியம் பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து எழுமாற்றாக பிசீஆர் பரிசோதனையை முன்னெடுத்திருந்தனர்.

அத்தியாவசிய தேவை கருதி பாஸ் அனுமதி பெற்று வீதியால் பயணித்தவர்கள், தேவையற்ற வகையில் நகரில் நடமாடியவர்கள் என அனைவரும் பொலிசாரால் வழிமறிக்கப்பட்டு, சுகாதாரப் பிரிவினரால் அவர்களது விபரங்கள் பதியப்பட்டு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது 50 பேர் வரையில் இவ்வாறு பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.