கனடாவில் புலம்பெயர் மக்களை காவுவாங்கும் கொரோனா!

கனடாவில் கொரோனா இறப்புகளில் சரிபாதிக்கும் அதிகமானோர் புலம்பெயர் மக்கள் என்பது உத்தியோகப்பூர்வ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

கனடாவில் கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரையான காலகட்டத்தில், பெருந்தொற்றால் 8,300 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

அந்த இறப்புகளில் சுமார் 67 சதவீதம் கியூபெக்கிலும், 28 சதவீதம் ஒன்ராறியோவிலும், மூன்று சதவீதம் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் நிகழ்ந்துள்ளது.

இதில் கியூபெக்கில் ஏற்பட்ட இறப்புகளில் 48% பேர் புலம்பெயர் மக்கள் எனவும், ஒன்ராறியோவில் ஏற்பட்ட இறப்புகளில் 45% புலம்பெயர் மக்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும் 65 வயதுக்கு உட்பட்ட புலம்பெயர் மக்களே அதிகவும் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். 65 வயதிற்குட்பட்டவர்களில் கொரோனா தொடர்பான இறப்புகளில் 30 சதவிகிதம் புலம்பெயர்ந்தோர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வான்கூவர் மற்றும் ரொறன்ரோவில் கொரோனா நோயால் இறந்தவர்களில் 44 முதல் 51 சதவீதம் பேர் புலபெயர் மக்கள். கொரோனாவால் இறந்த புலம்பெயர் மக்களில் பெரும்பாலோர் மாண்ட்ரீல், ரொறன்ரோ மற்றும் வான்கூவர் ஆகிய இடங்களில் வசித்து வந்தவர்கள்.

புலம்பெயர் மக்கள் அதிகம் இறக்க காரணமாக கூறப்படுவது, அவர்கள் அத்தியாவசிய தேவைகள் பிரிவில் அதிகம் பணியாற்றுபவர்கள், அதிக மக்கள் கூட்டம் கொண்ட பகுதிகளில் வசித்து வருபவர்கள்,

மட்டுமின்றி மொழி பிரச்சனை கொண்டவர்கள் எனவும் சுகாதார ரீதியான அடிப்படை அறிவு குறைவானவர்கள் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.