கொழும்பில் தொற்றாளர்களால் நிரம்பிவழியும் மருத்துவமனை!

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் கோவிட் நோயாளர்கள் குவிந்துள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வரும் நிலையில், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஹசித்த அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் 160 பேர் தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 8 பேர் தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருவதனால் அந்தப் பிரிவிலுள்ள அனைத்து நோயாளர் கட்டில்களும் பூரணமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்படுகின்ற நோயாளர்களுக்கு கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையே சிகிச்சையளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.