ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்

​ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டனர்.

ஆனால், இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர நடைபெற்ற அமைதிப்பேச்சுவார்த்தையில் தலீபான்களுடன் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த உடன்பாட்டின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ மற்றும் அமெரிக்க படைகள் அனைவரும் வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்பபெறப்பட்டு வருகின்றன. படைகள் திரும்பப்பெறப்படுவதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தனது தாக்குதலை தலீபான் பயங்கரவாதிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் இன்று மாலை 4 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு பகுதிகளில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது.

காபுலின் டெஸ் இ பார்ஷி பகுதி மற்றும் அலி ஜின்னா மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த மினி வேன்களை குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த இரு பகுதிகளில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் மினிவேன்களில் பயணம் செய்தவர்கள் உள்பட 7 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்ற பகுதிகளுக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் தலீபான்களோ அல்லது ஐஎஸ் பயங்கரவாதிகளோ இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.