யாழில் கட்டுப்பாடுகளை மீறி நடாத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்ட குருக்கள் உற்பட 50 ற்கும் மேற்பட்டோர் அதிரடியாக தனிமடுத்தப்பட்டனர்!

 வடமராட்சி பகுதியில் கொவிட் 19 கட்டுப்பாடுகளை மீறி அனுமதியின்றி நடாத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்ட குருக்கள், புகைப்படப் பிடிப்பாளர்கள் உட்பட சுமார் 50 ற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இச்சம்பவம் இன்று மண்டான், கரணவாய் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கட்டுவனை சேர்ந்த இளைஞனிற்கும், மண்டானை சேர்ந்த யுவதிக்கும் இன்று சுகாதார தரப்பின் அனுமதியின்றி திருமணம் நடைபெற்றது.

இது குறித்த தகவல் நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்றனர். பொலிசார் வந்ததை அவதானித்த திருமண வீட்டு விருந்தினர்கள் நாலா திசையிலும் சிதறி தப்பியோடி விட்டனர்.

பொலிசார் அதிரடியாக நுழைந்து, வீடியோ படப்பிடிப்பாளரை பிடித்து விட்டனர். அவரது கமராவை பறிமுதல் செய்து, புகைப்படத்தில் இருந்தவர்களை அடையாளம் கண்டனர். இதன்படி, 50 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

உடனடியாக, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது. பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, குருக்கள், புகைப்பட பிடிப்பாளர் மற்றும் திருமணத்திற்கு வந்து தலைதெறிக்க தப்பியோடியவர்கள் என 50 பேரை தனிமைப்படுத்தியுள்ளனர்.