எரிபொருள் விலை உயர்வு என்பது அரசு எடுத்த முடிவு!

எரிபொருள் விலை உயர்வு என்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசு எடுத்த முடிவு என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கூறிய அவர், “நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்புதலுக்குப் பின்னரே எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக பிரதமர் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக் குழுவால் விலையை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்” என மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறிய கூற்றுக்களை நிராகரித்த அமைச்சர் உதய கம்மன்பில, இந்த கடிதம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே சவால் விடுகிறது என்றும் குறிப்பிட்டார்.