வடமராட்சி கிழக்கு கடலில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமைக்காக 29பேர் கைது

வடமராட்சி கிழக்கு- குடாரப்பு கடலில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமைக்காக 29 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபர்கள், கடலட்டையை பிடிப்பதற்காக பயன்படுத்திய 11 படகுகள் மற்றும் வெளியிணைப்பு இயந்திரங்கள், கடலட்டை ஆகியவற்றை கடற்படை கைப்பற்றியுள்ளது.

வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் குடாரப்பு, மாமுனை ஆகிய பகுதிகளிலுள்ள கடற்கரையில் வாடி அமைத்து, கடலட்டை பிடித்தலில் ஈடுபட்டு வந்த மீனவர்களையே கடற்படை கைது செய்துள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அதிகாரிகளிடம் மீனவர்களையும் கைப்பற்றிய உபகரணங்களையும் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இவர்களை, பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்திற்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.