மலையகத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டிலும் கனத்த மழை பெய்து வருகிறது.

நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதுடன் நீர்வீழ்ச்சிகளினதும் நீர் மட்டம் அதிகரித்துள்ளன.

எனவே பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன.

நீர் போசன பிரதேசங்களில் பெய்து கன மழை காரணமாக மவுசாகலை, காசல்ரி, கெனியோன் லக்ஸபான, விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகின்றன.

எனவே இந்த நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களின நீர் மட்டம் அதிகரித்துள்ளதனால் நீர்த்தேக்கங்களின் நீரினை பயன்படுத்தி உச்ச அளவு மின் உற்பத்தி செய்து வருவதாகவும் மின்சார சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் பல இடங்களில் மண்சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயமும் ஏற்பட்டுள்ளன எனவே இந்த வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இதே வேளை தொடர்ச்சியாக இரவு வேளைகளில் மழை பெய்து வருவதனால் மலைகளுக்கும் மண் மேடுகளுக்கும் அருகாமையில் வாழும் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் மண்சரிவு அபாயம் காணப்பட்டால் அவ்விடங்களில் இருந்து ஒதுங்கி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.