பிரான்ஸில் 12 -17 வயதுக்குட்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி!

பிரான்ஸில் 12 -17 வயதுக்குட்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள தடுப்பூசி போடும் பணிகளுக்கு முன்னதாக, தடுப்பூசி போடுபவர்கள், அவர்களது பெற்றோர்களது சம்மத சான்றிதழை பெறவேண்டும். அவர்களது அனுமதியுடன் மாத்திரமே தடுப்பூசி போடப்படும் என ஒற்றுமை மற்றும் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன், குறித்த சான்றிதழை தரவிறக்கம் செய்யும் இணைப்பையும் பகிர்ந்துள்ளது. தடுப்பூசி நிலையத்துக்கு வருவதற்கு முன்பாக அவர்கள் இந்த அனுமதி பத்திரத்தை நிரப்பி, கையெழுத்திடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்திருந்த நிலையில், 12 வயதில் இருந்து தடுப்பூசி போடப்படும் முடிவினை இம்மாதம் 2ஆம் திகதி ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்(Emmanuel Macron) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.