இலங்கையில் டெல்டா கொவிட் பரவல்?

இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பரவிவரும் டெல்டா கொவிட் திரிபு மிகவும் ஆபத்தான ஒன்றெனவும், இதனை நாட்டுக்குள் பரவவிடாமல் தடுப்பதற்கு விமான நிலையம், துறைமுகம் போன்ற இடங்களில் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும் என வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களை தொடர்புகொள்ளாதிருப்பதன் மூலம் இந்த வைரஸ் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பயணக்கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களின் நடத்தைக் கோலத்தை அவதானிக்கையில், அதன் சாதகமான பெறுபேற்றை பெறமுடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலப்பகுதிகளில், நடமாட முடியாத வயோதிபர்கள் மற்றும் நோயாளர்களை கதிரைகளில் வைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கு தூக்கிச் செல்வதை போன்று, தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கும் அக்கறை காட்டுமாறு பொதுமக்களிடம் அவர் மேலும் கோரியுள்ளார். இந்த தொற்றானது சுகாதார பிரிவினரால் மாத்திரம் கட்டுப்படுத்தக்கூடியதொன்றல்ல எனவும், அதற்கு மக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்றும் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்னமும் கொவிட் அச்சம் நீங்கவில்லை என்றும், பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதிகளில் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சியை இனிவரும் காலங்களில் கண்டுகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.