தாயை கொன்று சமைத்து சாப்பிட்ட வாலிபன்!

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ் ( வயது 28). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 60 வயதான தனது தாயுடன் ஏற்பட்ட தகராறின் போது, பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் தனது தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைத்தார். 2 வாரங்களுக்குப் பிறகு அந்த உடல் பாகங்களில் சிலவற்றை அவர் சமைத்து சாப்பிட்டார். மேலும் தனது நாய்க்கும் அதனை உணவாக அளித்தார். இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆல்பர்ட்டோவின் தாயின் நெருங்கிய தோழி ஒருவர் தனது தோழியை நீண்ட நாட்களாக காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் ஆல்பர்ட்டோவின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிளாஸ்டிக் டப்பாக்களில் பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர். இதையடுத்து அவர்கள் ஆல்பர்ட்டோவை பிடித்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. அதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று மாட்ரிட் கோர்ட்டில் நடந்தது. விசாரணையின்போது ஆல்பர்ட்டோ, கொலை நடந்த சமயத்தில் தான் மன நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறினார். அதனை ஏற்க மறுத்த
நீதிபதி ஆல்பர்ட்டோவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.