மேலதிக அதிகாரம் வழங்குவதாகக்கூறி இருக்கக்கூடிய அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கிறது – சுரேஸ் பிரேமசந்திரன்

மாகாண சபைக்குரிய அதிகாரங்களை மத்திய அரசு தொடர்ந்தும் கையகப்படுத்தும் செயற்பாட்டுகளுக்கு எதிராக விரைவில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 13ஆவது திருத்தத்தின் ஊடாக குறைந்தபட்ச அதிகாரங்களே வழங்கப்பட்டன.இந்த அதிகாரங்கள் இப்போது பறிக்கப்படுவதை பார்க்கமுடிகின்றது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இது குறித்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.

அண்மையில் மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் மாகாண சபைகள் எல்லாமே இல்லாமல் உள்ள சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தல் காலவரையின்றி பிற்போடப்பட்டு இருக்கின்ற சூழலில் மாகாண அதிகாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய பல முக்கியமான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.

இப்போது வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய மாவட்ட வைத்தியசாலைகளில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசு பொறுப்பேற்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வைத்தியசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்த முழு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு அது நிறைவு பெற்றுள்ளது.

அரசாங்கம் ஐநா சபைக்கும் இந்தியாவிற்கும் தாங்கள் 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவோம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவோம், இப்பொழுது உள்ள அதிகாரங்களை விட மேலதிகமான அதிகாரங்களை வழங்குவோம் என கூறிக்கொண்டு இப்பொழுது இருக்கக்கூடிய அதிகாரங்களும் தொடர்ச்சியாக பறித்துவருகிறது.

எனவே இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான கபடத்தனமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென நாம் கோரிக்கையை முன்வைக்கிறோம் என்றார்.