கர்ப்பிணி மனைவியை 22 கிலோ மீற்றர் தூரம் வைத்தியசாலைக்கு தூக்கி சென்ற கணவரை நெகிழ வைத்த மக்கள்!

தென்னிலங்கையில் வெள்ளத்திற்கு மத்தியில் கர்ப்பிணி மனைவியை 22 கிலோ மீற்றர் தூரம் வைத்தியசாலைக்கு தூக்கி சென்ற கணவரை மக்கள் நெகிழ வைத்துள்ளனர்.

நேற்று அந்த தம்பதி தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்ற மக்கள், தம்பதியினால் தோட்ட அலுவலகத்திற்கு செலுத்தவிருந்த 65 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் வீட்டிற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொடுப்பதற்கும் மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் தங்குவதற்கு வீடு ஒன்றை வழங்குவதற்கும் நபர் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மனைவி 22 கிலோ மீற்றர் தூக்கிச் சென்ற சுரேஷ் குமார், காலி ஹினிதும பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அவர் வாழும் கொடிகந்த கிராமம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது.

இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான சுரேஷ் குமாரின் மனைவி திடீரென சுகயீனமடைந்துள்ளார். வயிற்றிலுள்ள குழந்தையின் எவ்வித அசைவுகளும் இல்லை என மனைவி குறிப்பிட்டுள்ளார். குடும்ப சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்ட போது 5 மணித்தியாலங்களுக்குள் மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர்.

முழு பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளதுடன், பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மனைவியை வைத்தியசாலைக்கு தூக்கி செல்ல சுரேஷ் தீர்மானித்தார். அதற்கமைய வைத்தியசாலைக்கு மனைவியை தூக்கி சென்று அனுமதித்துள்ளார்.

மனைவியும் குழந்தையும் ஆபத்தின்றி உயிர் தப்பியதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை தொலைக்காட்சி செய்திகளில் பார்த்த மக்கள் சுரேஷ் குமார் வீட்டிற்கு சென்று தொடர்ந்து உதவி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.