கொழும்பு – தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கம் ஒன்று கொரோனா

கொழும்பு – தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கம் ஒன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளது.

2012- ஆம் ஆண்டு தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தோர் (Thor) என்ற ஆண் சிங்கத்தக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தச் சிங்கம் கடந்த சில நாட்களாக இருமல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்தது. இதனையடுத்து இதற்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்ய மிருகக் காட்சிச் சாலை அதிகாரிகள் முடிவு செய்தனர். பேராதனையில் உள்ள கால்நடை போதானா வைத்தியசாலையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த சிங்கம் இருந்த கூண்டுப் பகுதியில் கடமையில் இருந்த 3 மிருகக் காட்சிச் சாலை ஊழியர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கத்துக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட அதேசமயத்தில் மிருகக் காட்சிச் சாலையில் இருந்த ஒரு வரிக்குதிரை மற்றும் ஒரு நீர்யானை ஆகியவை நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளன. எனினும் இவற்றுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரியவருகிறது.

இதற்கிடையில் விலங்குகளுக்கான பி.சி.ஆர் சோதனை முடிவுகளில் தவறுகள் இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதால் தொற்று உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிங்கம் தொடர்பில் துல்லியமான சோதனை நடத்த இந்தியாவிடம் உதவி பெற முடிவு செய்துள்ளதாக வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சென்னை – வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் 08 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் அடுத்ததுத்து இரண்டு சிங்கங்கள் உயிரிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது