இணைய வழி கற்றல் நடவடிக்கையால் நெருக்கடி நிலையில் பல மாணவர்கள்!

கோவிட் தொற்றானது தற்போது உலகின் பல நாடுகளை முடக்கி வைத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்த விடயமே.

இந்த நிலையில் இலங்கையிலும் கோவிட் தொற்று அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள பயணத்தடையால் பலரின் அன்றாட வேலைகள் ஸ்தம்பித்துள்ளன.

அத்துடன் மாணவர்களின் கல்வி நிலையும் கேள்விக்குறியாகவே உள்ளது. பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் இணைய வழியாக கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் சில மாணவர்கள் நன்மையடைந்துள்ள போதும் பல மாணவர்கள் அதிலும் குறிப்பாக வறுமையான குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இணையவழி கற்கைக்கு தேவையான ஸ்மார்ட் தொலைபேசி, கணனி அல்லது மடிக்கணனி போன்றவை இல்லாமலும் அப்படியே அவை இருந்தாலும் கூட வகுப்பினை மேற்கொள்வதற்கான Data Packgeஐ போடுவதற்கான பணம் இன்றி அவதிப்படும் நிலை நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

பயணத்தடை காரணமாக உழைப்பின்றி கால் வயிறு கஞ்சிக்கே அல்லல்படும் நிலையிலுள்ள குடும்பங்களுக்கு இணைய வழியான கல்வியானது எட்டாக்கனியாகவே உள்ளது.

அன்றாட கூலிக்கு வேலை செய்து வருபவர்களுக்கு இந்த பயணத்தடை பெரிய அடி எனும் நிலையில், அவர்கள் குடும்பத்திற்கு இணைய வழி கல்வி என்பது பேரிடியாகவே காணப்படுகிறது.

இந்த நிலைமை தான் இவ்வாறு இருக்கிறது என்றால் மலையகம் உள்ளிட்ட கிராம புற மாணவர்கள் சரியான Coverage இன்றி பெரிதும் அல்லல்படுகின்றார்கள்.

தற்போது சீரற்ற காலநிலை நிலவும் இந்த சந்தர்ப்பத்திலும் கூட Coverage கிடைக்கக்கூடிய இடங்களை தேடி மழையில் நனைந்தவாறு கல்வி கற்கும் அதேவேளை, கூரை மற்றும் மரங்கள் என அனைத்து உயரமான இடங்களுக்கும் Coverage தேடி செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க மற்ற புறத்தில் பகுதி நேர வகுப்பாசிரியர்களும் இணைய வழியாக கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கை வகுப்புக்கள் நடந்ததும் அவர்களுக்கு வகுப்பிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைமையிலும் சில மாணவர்கள் சிக்கி தவித்து தான் வருகின்றனர்.

கோவிட் அச்சம் ஒரு பக்கம் எனில், பட்டினி மறு பக்கம் இதையெல்லாம் கடந்து மாணவர்கள் படும் துயரம் வார்த்தைகளில் சொல்ல முடியாதவை.

எனவே திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட முன்னர் அது அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி பயனளிக்குமா என்பதை அறிந்து செயற்படுத்த வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும்.