யாழில் அபாயமான கட்டம் நீங்க வில்லை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்க வில்லை. எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவு முதற்கட்டமாக 71,712 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் பிரகாரம் முதற் கட்டமாக சமுர்த்தி பெறுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக கொடுப்பனவு பெறுவோர், முதியோர் கொடுப்பனவுகள் பெறுவோருக்கே வழங்கப்பட்டுள்ளன.

ஏனையோருக்கும் விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்க்கிறோம். அத்தோடு சமுர்த்தி பெறாதவர்களுக்கான 5ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்கான நிதி வந்தடைந்ததும் ஏனையோருக்கும் வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் நிலைமையை அவதானிக்கும் போது நேற்றைய தினம் மாத்திரம் 83 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளனர்.

1,754 குடும்பங்களைச் சேர்ந்த 5,613 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் 63 ஆக கொரோனா தொற்று மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோப்பாய் இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 321 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் வட்டுக்கோட்டை இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 159 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை நல்லூர் அரசடி பகுதி இன்று முதல் தனிமைபடுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணிக்கு நீக்கப்படுகிறது.

அத்தோடு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை காணப்படும் என்ற நிபந்தனையுடன் தான் பயணத்தடை தளர்த்தப்படவுள்ளது.

மேலும் பயணத்தடை தளர்த்தப்படும் போது அவசியமான தேவைகளுக்கு மாத்திரம் பொது மக்களை வெளியில் செல்லுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். அத்தோடு இந்தப் பயணத் தடையானது 23 ஆம் திகதி இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டு மீண்டும் 25 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை தொடருமென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும் சூழ்நிலைக்கேற்ப இந்த நிலைகளில் மாற்றம் வரலாம்.ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு தொடர்ந்தும் தடை காணப்படுகின்றது.

மேலும் நாளாந்த தொற்று நிலைமைகளில் யாழ் மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்கவில்லை. எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என்றார்.