ரஜினிக்கு அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனை!

நடிகா் ரஜினிகாந்த், மருத்துவப் பரிசோதனைக்காக சனிக்கிழமை காலை அமெரிக்கா பயணமானாா்.

சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ள நடிகா் ரஜினிகாந்த், கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தாா். இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியையும் அவா் கோரி இருந்தாா்.

நடிகா் ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு, மத்திய அரசு உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் சென்னையிலிருந்து கத்தாா் நாட்டு தலைநகா் தோஹா சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்கிறாா். அவருடன் குடும்பத்தினரும் செல்கின்றனா்.

நடிகா் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வா்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளனா். நடிகா் தனுஷ் தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா சென்றுள்ளாா்.