போக்குவரத்து கட்டுப்பாடு தளர்வு சுதந்திரமாக நடமாடுவதற்கல்ல – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது எமக்கு முழுமையாக சுதந்திரமாக நடமாட முடியும் என்ற நிலைப்பாட்டில் அல்ல.

அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எந்தவொரு காரணிக்காகவும் வீட்டிலிருந்து வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தினார்.

2 இலட்சம் தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து கிடைக்கும் – சுகாதார அமைச்சு | Virakesari.lk

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சமூக இடைவெளியைப் பேணுதல் மற்றும் முறையான முகக்கவசம் அணிதல் என்பவற்றை தாண்டி எமக்கு வைரஸ் தொற்று ஏற்படுமா என்பதை ஸ்திரமாகக் கூற முடியாது.

எனவே நாம் இதுவரையில் பின்பற்றிக் கொண்டிருக்கும் சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டியதே தற்போது அவசியமாகும். இதன் மூலம் வைரஸ் பரவல் மேலும் அதிகரிப்பதை தவிர்த்துக் கொள்ள முடியும்.

ஏனைய வைரஸ்களை விட வேகமாக பிரிதொரு வைரஸ் பரவுகிறது என்றால் , அவ்வாறு அந்த வைரஸ் பரவுவதற்கான சூழல் காணப்படுகிறது என்றே அர்த்தமாகும்.

எனவே சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது எமக்கு முழுமையாக சுதந்திரமாக நடமாட முடியும் என்ற நிலைப்பாட்டில் அல்ல. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எந்தவொரு காரணிக்காகவும் வீட்டிலிருந்து வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணி வரை 1560 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 234 624 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 197 259 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதோடு , 36 816 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதே வேளை நேற்று மேலும் 51 கொவிட் மரணங்களும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.