இந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தினை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது : சாணக்கியன்

இந்த நாட்டின் பொருளாதாரத்தை இந்த அரசாங்கத்தினால் கட்டியெழுப்ப முடியாது என்பதை நாங்கள் அன்றே சொன்னோம். மனித உரிமைகளை மதிக்காது, கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத் தராது இந்த அரசாங்கமானது தனித்து செயற்பட முடியாது.

அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் எடுக்கப்பட்ட விஷேட தீர்மானத்தின் ஊடாக அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்காமல் அனைத்து நாடுகளையும் பகைத்துக் கொண்டு இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காமல் முன்செல்லமுடியாது, அந்த தீர்வினை வழங்க விரும்பிய கட்சிக்கு வாக்களியுங்கள் என்று நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் நாங்கள் விலைவாசிகளை குறைப்போம், மக்களின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அரசாங்கத்திற்கு வாக்குசேகரித்த ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் அவர்களுக்கு வாக்குசேகரித்த ஒவ்வொரு பிரதிநிதியும் இதற்கு உடனடியாக தங்களது கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தினைப் பொருத்தவரையில் அன்றாடம் உழைத்து வாழ்க்கை நடாத்தும் மக்கள் தொடர்பில் சிந்திக்காத அரசாங்கமாகவே இருக்கின்றது. இன்றைய பயணத்தடையின் போது சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பயணிக்கும் நிலை காணப்படுகின்றது. ஆனால் பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்துபவர் மட்டுமே எந்தவித போக்குவரத்தினையும் செய்யமுடியாத நிலையுள்ளது.

கோடிக்கணக்காக உழைக்கும் கம்பனிகளுக்கு விசேட பாஸ்கள் வழங்கப்பட்டு அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்த அரசாங்கமானது பெரியபெரிய கம்பனிகளுக்கான அரசாங்கமாகவே செயற்படுகின்றது. ஊழலில் மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ள அரசாங்கமாகவே இந்த அரசாங்கம் இருக்கின்றது. இவ்வாறான ஒரு கஷ்ட நிலையிலேயே இந்த நாட்டில் தமிழ் மக்களும் வாழ்கின்றனர்.

தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி என்பது தங்களது ஆதரவாளர்களுக்கு மண் அனுமதிப் பத்திரம் வழங்குவதும் இரண்டு மூன்று பாதைகளை புனரமைத்துவிட்டு அதனை வைத்து பூச்சாண்டி காட்டுவதல்ல. மக்களின் அன்றாட நிலைமைகள் குறித்தும் அரசாங்கத்துடன் இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்