வடக்குக்கு எப்போது தடுப்பூசி?

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இந்த மாத இறுதியில் கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படலாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், இலங்கையிலுள்ள 9 மாகாணங்களின் சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு ‘சினோபார்ம்’ தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றியவர்களுக்கு, இரண்டாவது டோஸ் ஏற்றப்படும் போது ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதலாம் கட்டத் தடுப்பூசிகள் வழங்கக் கூடியதாக இருக்கும்.

இலங்கைக்கு கிடைத்துள்ள 10 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இந்த மாத இறுதியில் யாழ். மாவட்டத்தில் ஏற்றப்படவுள்ளது.

இதன்போது வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதலாவது டோஸை வழங்கலாம்.

கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்படும் போது அது தொடர்பான பதிவுகள் முக்கியம்.

இரண்டு டோசும் ஏற்றியவர்களுக்கு விசேட சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்