சீனா-இலங்கை காதல் உறவு அளப்பரியது: இந்தியாவுக்கு என்ன வேலை? தமிழருக்கு என்ன நிலைமை?

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ‘பகிரப்பட்ட சூழலில் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட எங்களின் பரஸ்பர பாதுகாப்பு உட்பட எங்களின் மிகச்சிறந்த இரு தரப்பு ஒத்துழைப்பை இலங்கை கருத்தில்கொள்ளும்’ என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறை நகரத் திட்டம் குறித்து எங்களின் சமீபத்தைய பாதுகாப்பு முன்னோக்கு அடிப்படையில் அண்மைய விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகநகர கட்டமைப்பு குறித்து இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள கரிசனைகளை கருத்திலெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கடலை மூடிக் கட்டப்பட்ட சைனா டவுன் (China Town) தொடர்பாக ஒரு பகுதி சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல்வாதிகளும் எதிரான கருத்துக்களைத் தெரிவித்திருக்கும் ஒரு பின்னணியில் இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள மூன்று தீவுகளில் சீனாவின் நிதி உதவியோடு புதுப்பிக்கப்படும் எரிசக்தித் திட்டங்கள் அமைக்கப்படவுள்ள ஒரு பின்னணியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.

இலங்கை தீவில் சீன விரிவாக்கம் தொடர்பாக இந்தியா பெரும்பாலும் நிதானமாகவும் விரோதமற்ற விதத்திலும்தான் கருத்துத் தெரிவித்து வருகிறது. சில இந்திய ஆய்வாளர்கள் அதனை முதலீட்டு வாய்ப்புகளாக வியாக்கியானப்படுத்துகிறார்கள். எனினும், அதில் இருக்கக்கூடிய பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தல்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள். அதேசமயம் தமிழகத்தை மையமாகக் கொண்ட யூடியூப்பர்கள் அதை சீனாவின் ஆக்கிரமிப்பு என்று வர்ணிக்கிறார்கள்.

ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சு அதனை அவ்வாறு பார்க்கவில்லை என்று தெரிகிறது. அல்லது இந்தியா அவ்வாறு பார்க்கவில்லை என்று வெளியில் காட்ட விரும்புகிறதா?

தமிழ்நாட்டின் யூடியூபர்கள் கூறுகிறார்கள், அது ஒரு சீன ஆக்கிரமிப்பு என்று. அல்லது பொருளாதாரப் படையெடுப்பு என்று. ஆனால், மெய்யாகவே சீனா டவுன், அம்பாந்தோட்டை துறைமுகம், தாமரை மொட்டுக் கோபுரம், தீவுகளில் அமைக்கப்படவிருக்கும் புதுப்பிக்கப்படும் எரிசக்தித் திட்டம் போன்றன ஆக்கிரமிப்புக்களா அல்லது பொருளாதாரப் படை எடுப்புக்களா?

ஆக்கிரமிப்பு அல்லது படையெடுப்பு எனப்படுவது ஒரு வன் அரசியல். அது ஒரு பலப் பிரயோகம். ஆனால், இலங்கை தீவில் கடந்த தசாப்தம் முழுவதும் நடந்து கொண்டிருப்பது பலவந்தம் அல்ல. அது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளுக்கூடாக நிகழும் சந்தை விரிவாக்கம். அல்லது முதலீட்டு முயற்சி, அல்லது உட்கட்டுமான அபிவிருத்தி, அல்லது வேறு எந்தப் பெயரிலும் அழைக்கலாம்.

இரண்டு அரசுகளும் ஏற்றுக்கொண்டு எழுதப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம்தான் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன, முன்னெடுக்கப்படுகின்றன. அவை இரகசிய உடன்படிக்கைகள் அல்ல. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான வெளிப்படையான வர்த்தக உடன்படிக்கைகள். துறைமுக நகரத்தைச் சீனா பங்கருக்குள் கட்டவில்லை. வெளிப்படையாகத்தான் கடலை மூடி ஒரு தீவை உருவாக்கி அதில் கட்டுகிறது. அது இன்று நேற்று கட்டப்படவில்லை. பல ஆண்டுகளாக கட்டுகிறது. அதை உலகம் முழுவதுமே பார்த்துக்கொண்டிருக்கிறது.

அப்படித்தான், யாழ்ப்பாணத்தின் தீவுகளில் கட்டப்படவிருக்கும் எரிசக்தித் திட்டமும். அங்கேயும் மூன்று தீவுகளிலும் அதாவது, நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு ஆகிய மூன்று தீவுகளிலும் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வேலியிடப்பட்டு அங்கெல்லாம் ‘இது மின்சார சபைக்குரிய நிலம், யாரும் உட்புகக் கூடாது’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வருங்காலத்தில் அங்கே சீன உதவியுடன் கட்டுமான வேலைகள் தொடங்கப்படும். எனவே, தொகுத்துப் பார்த்தால் சீனா, இலங்கை மீது படை எடுக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ இல்லை. இது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான காதல் உறவின் விளைவு.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு எனப்படுவது பல தசாப்தங்களுக்கும் முற்பட்டது. குறிப்பாக அரிசி, இறப்பர் உடன்படிக்கையோடு அது ஆழமான விதத்தில் தொடங்குகிறது. அண்மையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் போது அதில் உரை நிகழ்த்திய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அதைச் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான காதல் பல தசாப்தங்களுக்குரியது. குறிப்பாக ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியின் போது அரசாங்கத்துக்கு உடனடி உதவிக்கு வந்தது முதலில் இந்தியா, அடுத்தது சீனா. இதுதொடர்பாக, ஒரு சுவாரசியமான கதை உண்டு,

கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி. தலைவர்களைப் கைது செய்த அரசாங்கம் அவர்களை யாழ்ப்பாணம் கோட்டை சிறையில் அடைத்து வைத்திருந்தது. அச்சிறைக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் ஜே.வி.பி. கைதிகளிடம் வாசிக்கப் புத்தகங்கள் வேண்டுமா என்று கேட்டிருக்கிறார். ஜே.வி.பி.யினரும் ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள். அவையாவும் சீன கம்யூனிஸ்ட் தத்துவங்களைக் கூறும் சிவப்பு மட்டைப் புத்தகங்கள். சில நாட்களின் பின் அந்தப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து ஜே.வி.பி. கைதிகளிடம் கையளித்த அந்த அதிகாரி, தன் கையிலிருந்த ரி-56 ரக துப்பாக்கியைக் காட்டி பின்வருமாறு கூறியிருக்கிறார்,

‘சீனா உங்களுக்கு இந்தச் சிவப்புப் புத்தகங்களைத் தந்தது. எங்களுக்கோ இந்த துப்பாக்கிகளைத் தந்தது’ என்று. அதுதான் உண்மை. அதுதான் சீனா. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு என்பது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான மரபுசார், கட்டமைப்பு சார் உறவுதான். அந்த உறவின் பிரகாரம் சீனா கொழும்போடு நெருக்கத்தைப் பேணுகிறது. அதைத் தாண்டி தமிழ் மக்களை நெருங்கி வரவேண்டிய தேவை சீனாவுக்கு வரவில்லை.

ஆனால், இந்தியாவுக்கு வந்தது. எப்படியென்றால் தமிழகத்தில் 8 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பாலமாகப் பயன்படுத்தி இந்தியா ஈழத் தமிழ் அரசியலுக்குள் நுழைந்து. அதன் இறுதி விளைவாக இந்திய-இலங்கை உடன்படிக்கை உருவாகியது. அந்த உடன்படிக்கை இரண்டு அரசுகளுக்கும் இடையிலானது. போராடிய தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலானது அல்ல. அதில் ஒரு செய்தி இருக்கிறது.

மேற்கு நாடுகளை நோக்கிச் சென்ற ஜெயவர்த்தனவை வழிக்குக் கொண்டுவர இந்தியா தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தைப் பயன்படுத்தியது என்பதுதான். இதில், தமிழகத்தை அவர்கள் ஒரு தளமாக ஈழத் தமிழர்களுக்குத் திறந்துவிட்டார்கள். ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான இரத்த பந்த உறவு இதற்குரிய அடிப்படைகளை ஏற்படுத்தியது.

எனவே இந்தியா, ஈழப் போராளிகளுக்கு ஆயுதம் வழங்கியதும் பயிற்சி வழங்கியதும் எதற்காகவென்றால் தனக்குக் கீழ்படியாத ஜெயவர்த்தனா அரசாங்கத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குத்தான். அதாவது, இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளை கையாள்வதற்குத்தான்.

அங்கிருந்து தொடங்கி இன்று வரையிலும் இந்தியா கொழும்பைத்தான் கையாண்டு வருகிறது. கொழும்பைக் கையாள முடியாத போது தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாளக்கூடிய வாய்ப்புக்களை இந்தியா எப்பொழுதும் கொண்டிருக்கிறது.

இந்த ஐந்து தசாப்த கால அனுபவங்களையும் ஈழத் தமிழர்கள் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவும் இலங்கை அரசாங்கத்தைத்தான் ஒரு தரப்பாகப் கருதிக் கையாண்டு வருகின்றன. இதில் ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. அதுதான் ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையில் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுதவிர, எல்லா பேரரசுகளும் இலங்கை அரசாங்கத்தைத்தான் கையாளுகின்றன. அல்லது இலங்கை அரசாங்கத்தைக் கையாள்வதற்குத் தேவைப்பட்டால் தமிழர் விவகாரத்தைக் கையில் எடுக்கின்றன.

சீனாவில் பலமான தமிழ் சமூகம் இல்லை. சீனாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் கலாசாரப் பிணைப்புகளும் இல்லை. இந்தியாவைப் போல சீனா தமிழ் மக்களுக்கு புவியியல் ரீதியாக அருகிலும் இல்லை. எனவே, சீனாவிற்கும் இலங்கைக்குமான உறவு எனப்படுவது முழுக்க முழுக்க அரசைக் கையாளும் உறவுதான்.

இறுதிக் கட்டப் போரில் சீனா மட்டுமல்லாது இந்தியாவும் பெரும்பாலான மேற்கு நாடுகளும் அரசாங்கத்தின் பக்கமே நின்றன. ஏன், ஐ.நா. கூட தமிழ் மக்களைக் காப்பாற்றக் கூடிய ஒரு நிலையில் இருக்கவில்லை. அல்லது கையாலாகாத ஒரு சாட்சியாகவும், காப்பாற்ற விரும்பாத ஒரு சாட்சியாகவும் காணப்பட்டது என்று கூறலாம்.

இவ்வாறு, சீனாவைப் போலவே இந்தியாவும் இறுதிக் கட்டப் போரில் அரசாங்கத்தைப் பலப்படுத்தியிருக்க ஏன், தமிழ் மக்கள் சீனாவை மட்டும் எதிர்ப்புணர்வோடு பார்க்க வேண்டும் என்று சீன அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தமிழ் ஊடகவியலாளர்களிடம் கேட்டிருக்கிறார். இது நடந்தது 2017ஆம் ஆண்டு.

இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் ஏற்பாட்டில் 10 தமிழ் ஊடகவியலாளர்கள் சீனாவுக்குச் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்கள். இதன்போது சீன அரச பிரதிநிதி ஒருவர் அந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும்போது மேற்சொன்ன கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்டப் போரில் எங்களைப் போலவே இந்தியாவும் அரசாங்கத்தைப் பலப்படுத்தியது. ஆனால், போர் முடிந்தபின்னர் தமிழ் மக்கள் இந்தியா செய்ததை மறந்து இந்தியாவை நோக்கிப் போகிறார்கள். ஆனால், சீனாவை மட்டும் ஏன் எதிர்நிலையில் வைத்துப் பார்க்கிறார்கள் என்ற தொனிப்பட அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதில் உண்மை உண்டு.

அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகளின் அடிப்படையில் உலகத்தில் உள்ள பெரும்பாலான அரசுகள் இறுதிக் கட்டப் போரில் இலங்கை அரசாங்கத்துக்குக் கைகொடுத்தன. இப்படிப் பார்த்தால் அன்றைக்கு இருந்த நிலையில் உலகின் பெரும்பாலான நாடுகள் தமிழர்களுக்கு எதிராகத் திரண்டு நின்றன எனலாம்.

எனவே, இது விடயத்தில் ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் இருக்கிறது. அரசுகள் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை அல்லது அரசற்ற ஒரு மக்கள் கூட்டத்தை அன்பின் பேராலும் அறநெறிகளின் பேராலும் நீதிநெறிகளின் பேராலும் நெருங்கி வருவதில்லை. மாறாக அரசியல், பொருளாதார, இராணுவ நலன்களின் பேரால்தான் நெருங்கி வருகின்றன.

அவ்வாறு அரசுகள் தங்களை நெருங்கி வர வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் பொழுது தமது பேர பலத்தை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில் எப்படி புத்திசாலித்தனமாகவும் தீர்க்கதரிசனமாகவும் நடந்து கொள்ளலாம் என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். மாறாக எந்த ஒரு நாட்டின் மீதும் காதலும் பாசமும் வைத்துவிட்டு அது ஏமாற்றமாக முடியும் பொழுது திட்டிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

எனவே, ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது மிகத் தெளிவானது. யாரும் தங்களைக் கருவிகளாகக் கையாள விடக்கூடாது. அப்படிக் கையாள முற்படுவோரை எப்படி தாங்கள கருவிகளாகக் கையாளலாம், அதன்மூலம் எவ்வாறு தமது அரசியல் இலக்குகளை அடையலாம் என்று சிந்தித்துச் செயற்பட வேண்டும்