கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிக்கிய கசிப்புக்காரர்கள்!

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் எட்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நன்னி, கண்டல்சாடு, மணல் ஆறு, சோள வெட்டுவான், தளவாய், படுகாடு, சாவாறு, கங்கை ஆற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள கசிப்பு உற்பத்தி நிலையங்களே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த கசிப்பு உற்பத்தி நிலையங்களில் 2000 ரூபா நாள் கூலிக்கு பணியாளர்களை வேலைக்கமர்த்தி கசிப்பு உற்பத்தி முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அக் கசிப்பு உற்பத்தி நிலையங்களில் கசிப்பு மற்றும் கோடாத் திரவமும் அடங்கிய 26 பரல்களில் சுமார் 3000 லீட்டர் கசிப்புக்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த 8 கசிப்பு உற்பத்தி நிலையங்களும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கசிப்பு உற்பத்தி நிலையங்கள் வைத்திருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் கிண்ணியா பொலிஸர் குறிப்பிட்டுள்ளனர்.