டோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நேற்று முன்தினம் (18) தொடங்குவதாக இருந்தது.

ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

நேற்றைய 2 வது நாள் ஆட்டம் மழை பாதிப்பு இல்லாமல் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கியது.

முதலில் விளையாடிய இந்திய அணி ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து இருந்தது.

கேப்டன் விராட் கோலி 44 ரன்னும், ரகானே 29 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

ரோகித் சர்மா 34 ரன்னில் ஜேமிசன் பந்திலும், சுப்மன்கில் 28 ரன்னில் வாக்னர் பந்திலும், புஜாரா 8 ரன்னில் போல்ட் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.

போதிய வெளிச்சம் இல்லாததால் நேற்றைய ஆட்டம் பாதிக்கப்பட்டது. 64.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

இன்றைய 3 வது நாள் ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

நேற்றைய (19) டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் பொறுப்பு வகித்ததன் மூலம் விராட் கோலி புதிய சாதனை படைத்தார்.

அதிக டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருந்த இந்தியர் என்ற வரலாற்றை படைத்தார்.

அவர் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

டோனி 60 டெஸ்டில் கேப்டனாக இருந்துள்ளார்.

இதில் 27 டெஸ்டில் வெற்றி கிடைத்தது.

18 இல் தோல்வி ஏற்பட்டது.

15 டெஸ்டு டிரா ஆனது.

அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

டெஸ்டில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

விராட் கோலி 61 டெஸ்டுக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார்.

சர்வதேச அளவில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரேமி சுமித் ஒருவரே 100 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

அவர் 109 போட்டிக்கு கேப்டன் பொறுப்பு வகித்தார்.

அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலன் பார்டர் 93 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் 10 ரன்னை தொட்ட போது விராட் கோலி 7 ஆயிரத்து 500 ரன்னை எடுத்தார்.

154 ஆவது இன்னிங்சில் அவர் இந்த ரன்னை தொட்டார்.

கவாஸ்கரும் இதே இன்னிங்சில் தான் 7 ஆயிரத்து 500 ரன்னை எடுத்து இருந்தார்.

சச்சின் 144 ஆவது இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்து இருந்தார்.

சர்வதேச அளவில் 7 ஆயிரத்து 500 ரன்கள் என்ற மைல் கல்லை அதிவேகத்தில் எட்டிய வீரர்களில் விராட் கோலி 9 ஆவது இடத்தில் உள்ளார்.

இந்திய வீரர்களில் அவருக்கு 4 ஆவது இடம் கிடைத்துள்ளது.

Previous articleபொது மக்களை முழந்தாளிட வைத்த அதிகாரிகளுக்கு இடமாற்றம்!
Next articleஎதிர்வரும் காலங்களில் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் – இராணுவ தளபதி எச்சரிக்கை