இந்தியாவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா!

இந்தியாவில் சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா இருப்பதாக உயிரியல் பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா மே 24 ஆம் திகதி, 4 சிங்கங்களுக்கும், மே 29-ஆம் திகதி 7 சிங்கங்களுக்கும் என மொத்தம் 11 சிங்கங்களின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக தேசிய உயா் பாதுகாப்பு விலங்கு நோய்கள் பகுப்பாய்வு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து அந்நிறுவனம் ஜூன் 3-ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையின்படி, 9 சிங்கங்களுக்குத் தொற்று உறுதியானதையடுத்து அன்றிலிருந்து விலங்குகள் தீவிர சிகிச்சையில் உள்ளன. இதில் 2 சிங்கங்கள் கொரோனாவால் உயிரிழந்தன.

இந்நிலையில், இங்குள்ள சிங்கங்களுக்கு தொற்று ஏற்படுத்திய மரபணு வரிசைப்படுத்துதலின் முடிவுகளைப் பகிா்ந்து கொள்ளுமாறு உயிரியல் பூங்கா அதிகாரிகள் தேசிய உயா் பாதுகாப்பு விலங்கு நோய்கள் பகுப்பாய்வு நிறுவனத்திடம் கோரியிருந்தனா்.

இந்த சூழலில் அந்நிறுவனத்தின் இயக்குநா் வெளியிட்ட அறிக்கையின்படி, மரபணு வரிசைப்படுத்துதல் பகுப்பாய்வில் 4 சிங்கங்களின் தொற்று மாதிரிகள் பாங்கோலின் பரம்பரை பி.1.617.2 வகையைச்சோ்ந்தவை எனவும், அவை உலக சுகாதார ஸ்தாபனம் வகைப்படுத்தியபடி டெல்டா வகையைச் சாா்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மாறுபட்ட வகை எனவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதோடு நடுநிலைத்தன்மைக்கு குறைவானது எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.