யாழ் கோப்பாய் கொரோனா வைத்தியசாலைக்கு 15 இற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிகிக்சைக்காக அனுமதி!

யாழ்ப்பாணம் கோப்பாய் கொரோனா வைத்தியசாலைக்கு 15 இற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென்னிலங்கையில் இருந்து பேருந்து ஒன்றில் அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

அவ்வாறு வந்தவர்கள் அனைவரும் ஹிந்தி மொழி மட்டும் பேசுவதால் மருத்துவ ரீதியிலோ பிற தேவைகளுக்காகவோ தொடர்பாடலை மேற்கொள்வதில் அங்கு பணியாற்றும் சிங்கள மொழி பேசும் மருத்துவர்கள் உட்பட சுகாதாரத் தரப்பினர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த கோப்பாய் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ், சிங்கள மக்கள் அச்சம் கலந்த நிலையிலேயே காணப்படுவதாவும் தெரியவருகிறது.

இந்தியாவின் “டெல்டா” வகை கொரோனா வைரஸ் குறித்து இலங்கையில் தொடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுவரும் நிலையில் குறித்த நோய்த் தொற்று அவர்களுக்கு இருக்கக்கூடும் என்பதால் அந்த மக்கள் நிற்கும் இடங்களை இலங்கையைச் சேர்ந்தவர்கள் தவிர்த்துவருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை பிந்திய தகவல்களின்படி, வத்தளை – ஹேக்கித்த பகுதியில் உள்ள இரும்புத் தொழிற்சாலையில் 128 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த தொழிற்சாலையில் அதிகமான இந்தியர்கள் பணியாற்றிவருவதாகவும் தென்னிலங்கைச் செய்திகள் தெரிவித்துள்ளன.

குறித்த தொழிற்சாலையில் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினருக்கு கிடைத்த தகவலை அடுத்து 192 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – கோப்பாய் கொரோனா வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டவர்கள் குறித்த தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றபோதிலும் அதனை உறுதிப்படுத்தமுடியவில்லை.