பயணக்கட்டுப்பாடு நீக்கம் – அனைத்து பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு, இன்று (திங்கட்கிழமை) தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளும் வழமைக்கு திரும்பி உள்ளதாகவும் மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதிகளில், மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் காணப்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வாழைச்சேனை, ஓட்டமாவடி, பிறைந்துறைச்சேனை ஆகிய பகுதிகளிலேயே அதிகளவு மக்கள் நடமாட்டம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மன்னர் ஆகிய மாவட்டங்களிலும் அனைத்து வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு, வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், சுகாதார நடைமுறைகளை கண்கானிப்பதற்காக அதிகமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோன்று மலையக பகுதிகளிலும் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் மக்களும் பொருள் கொள்வனவில் ஆர்வம் காட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனியார் மற்றும் அரச பேருந்துகள் சில போக்குவரத்தில் ஈடுப்பட்டு உள்ளதுடன் அவற்றில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கொழும்பு, காலி, மாத்தறை, கண்டி , களுத்துறை, என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகளவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகனடாவில் ஆண்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான பெண்கள் முகக்கவசம் அணிகின்றனர்!
Next articleஇந்த மாதத்தில் இதுவரை 53 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி