யாழ்.நெல்லியடி பகுதியில் மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து – ஒருவர் பலி

யாழ்.நெல்லியடி – வதிரி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை அருகில் உள்ள வளைவில் நடைபெற்றது.

சம்பவத்தில் அல்வாய் வடமேற்கு திக்கம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கஜஸ் வான் சாரதியான கண்ணா என அழைக்கப்படும்

வீரபத்திரபிள்ளை தங்கேஸ்வரன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்த பேரம்பலம் மயூரன் படுகாயமடைந்த நிலையில்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மோட்டார் சையிக்கிளில் இருவரும் பயணித்தவேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.