வவுனியா பிரதேச செயலகம் முன்பாக சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

சேவைக் காலத்தை அடிப்படையாக கொண்டு நியமனம் வழங்குமாறு சுகாதாரத் தொண்டர்களால் வவுனியா பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் ஒன்று இன்று (23.06) காலை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத் தொண்டர்கள் ‘தகமையை பாராது சேவைக்காலத்தை அடிப்படையாக கொண்டு நியமனம் வழங்கு, சுகாதார தொண்டர்கள் அனைவருக்கும் நியமனம் வழங்கு, ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் கீழ் சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத் தேர்வை நிறுத்து,

சுகாதார தொண்டர்களுக்கான ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு நேர்முகத் தேர்விலும் முறைகேடு, வேண்டும் வேண்டும் எங்களுக்கும் நியமனம் வேண்டும்’ என எழுதப்பட்ட பதாதைகனைளயும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பட்டத்தின் முடிவில் சுகாதார தொண்டர்களால் வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதுடன், கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கான மகஜர் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் விக்டர்ராஜிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர், வடமாகாண பிரதம செயலாளாரால் வழங்கப்பட்ட பட்டியலுக்கு அமைவாக 28 பேருக்கு நேர்முகத் தேர்வுகள் நடைபெறுகின்றன. எதிர்காலத்தில் ஏனையவர்களின் பெயர் பட்டியல் வழங்கப்பட்டால் அவர்களுக்கும் நேசர்முகத் தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

Previous articleகொரோனா நீங்க வேண்டி யாழ். நாக விகாரையில் வழிபாடு!
Next articleபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ரசிகரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய கமல்!