கனடாவில் மற்றொரு பழங்குடியின சிறுவர் குடியிருப்பு பள்ளியில் மனிதப் புதைகுழி!

கனடா – சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள ஒரு பழங்குடி சிறுவர்களுக்கான முன்னாள் குடியிருப்புக் பள்ளி புதைகுழியில் நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கம்லூப்ஸ் நகருக்கு அருகிலுள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இப்போது மற்றொரு குடியிருப்பு பள்ளியில் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள எச்சங்கள் கனடாவில் இதுவரை கண்டறியப்பட்டவற்றை விட அதிகமாக இருக்கலாம் என சஸ்காட்செவனின் பழங்குடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கோவெசஸ் கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவெசஸ் பழங்குடி கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து இது குறித்த மேலதிக தகவல்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சஸ்காட்செவனில் தற்போது மனித புதைகுழி கண்டறியப்பட்டுள்ள பழங்குடியின குடியிருப்பு பள்ளி 1899 முதல் 1997 வரை இயங்கியது. சஸ்காட்செவனின் தலைநகரான ரெஜினாவிலிருந்து கிழக்கே 87 மைல் தொலைவில் இப்பள்ளி உள்ளது.

19 ஆம் நூற்றாண்டு முதல் 1970 கள் வரை கனேடிய பழங்குடியின சிறுவர்களை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக குடியிருப்பு பள்ளிகள் இருந்தன. இவற்றில் சுமார் 150,000 க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் இணைய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அத்துடன், அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டி கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களுடைய சொந்த மொழிகளைப் பேச குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை. இப்பள்ளிகளில் பல பழங்குடியின குழந்தைகள் உடல், உள ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர். இந்தப் பள்ளிக் கட்டமைப்புக்களில் 6,000 குழந்தைகள் வரை இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கட்டமைக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் குறித்து கனேடிய அரசாங்கம் 2008 இல் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரியது. இந்தப் பள்ளிக் கட்டமைப்புக்களில் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட துன்புறுத்தல்கள் பரவலாக இருந்ததையும் கனேடிய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

பல மாணவர்கள் தங்கள் சொந்த மொழிகளைப் பேசியதற்காக தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர். பெற்றோர் மற்றும் தங்கள் கலாசார அடையாளங்களில் இருந்து அவர்கள் விலக்கிவைக்கப்பட்டனர். இதுவொரு கலாசார இனப்படுகொலையாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் பயணத்தடையிலும் அடங்காத மணல் கொள்ளையர்கள்; வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது
Next articleசட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் பிணை இல்லை!