முன்னாள் போராளிகளில் மூவர் சிறைச்சாலை அதிகாரிகளினால் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.

இன்று(புதன்கிழமை) பிற்பகல் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துவரப்பட்ட குறித்த மூவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த அவர்கள் இன்றைய தினம் தமது உறவினர்களை சந்தித்தது போன்று, நீண்ட காலமாக சிறையில் உள்ள ஏனையவர்களையும் விடுவித்து, அவர்களின் குடும்பத்துடன் இணைக்குமாறு ஜனாதிபதியிடம் தாங்கள் வேண்டுவதாகவும், தம்மை விடுவித்த ஜனாதிபதிக்கும், ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.