சுவிற்சர்லாந்து அரசின் தளர்வு அறிவிப்பு!

சுவிற்சர்லாந்து நடுவனரசு மகுடநுண்ணித்தொற்று (கோவிட்- 19) நடவடிக்கையில் இருந்து எதிர்பார்த்ததைவிடவும் அதிக தளர்வுகளை அறிவித்துள்ளது. பண்பாட்டு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் முகவுறை அணிய வேண்டும் எனும் கட்டாயத்தில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

இதுவரை துறைசார் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த உரிமைகளை தொழில்சாராத பொழுதுபோக்கு ஆட்களுக்கும் அளிக்க முன்வந்துள்ளது.

பெருநிகழ்வுகள் மகுடநுண்ணிச்சான்றுடன் முகவுறை அற்று நடைபெறவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நோய்த்தொற்றிலிருந்து நலம் அடைந்தோர் மற்றும் தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களை உறுதி செய்து நடைபெறும் நிகழ்வுகளில் மக்கள் தொகைக்கு அளிக்கப்பட்ட உச்சவரம்பு வரையறை நீக்கப்படுகின்றது.

ஆயிரம் ஆட்களுக்கு மேலாகப் பங்கெடுக்கும் நிகழ்வுகளுக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுபோல் வீடுகளிலிருந்து பணிசெய்வது கட்டாயம் என்பது நீக்கப்பட்டு, விருப்பின், வாய்ப்பிருப்பின் வீடுகளிலிருந்து பணிசெய்ய வெறும் முன்மொழிவு சுவிஸ் அரசால் அளிக்கப்படுகின்றது.

உயர்கல்வி நிலையங்களில் பங்கெடுக்கும் மாணவர்கள் தொகை வரம்பு நீக்கப்படுகின்றது. எத்தனை மாணவர்களும் வகுப்புக்களில் பங்கெடுக்கலாம். உணவகங்களில் ஒரு மேசைக்கு இத்தனை ஆட்கள் மட்டும் இருக்கலாம் எனும் வரையறையும் நீக்கப்படுகின்றது.

உள்ளரங்கிலிருந்தபடி உணவு உண்ண வேண்டும் எனும் கட்டாயம் மட்டும் தொடர்கின்றது. தொடர்ந்தும் விருந்தினர் நிரல் பதியப்பட வேண்டும். ஆனால் ஒரு குழுவிற்கு ஒருவர் பதிவுசெய்தால் போதுமானது என நடவடிக்கை தளர்வு செய்யப்படுகின்றது.

  1. 21 சனிக்கிழமை முதல் இத்தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன:

முகவுறை

வெளியரங்கில் முகவுறை கட்டாயம் கிடையாது. பொதுவெளிகளில், பொழுதுபோக்கு நிலையங்களில், உணவகங்களின் வெளியரங்கில், மின்னுந்து நிலையங்களில், பேருந்து நிலையத்தில், கப்பலின் மேற்தளத்தில், முகவுறைகள் அணிவது கட்டாயம் இல்லை. போதியளவு இடைவெளி (1.5மீற்ரர்) பேணமுடியாத சூழல்களில் பொதுவாக முகவுறை அணிய வேண்டப்படுகின்றது.

பணியிடங்களில் அதுபோல் இடைநிலைப் பாடசாலைகளில் முகவுறை கட்டாயம் விலக்கப்படுகின்றது. ஆனால் தொழில் நிறுவனம் நலன் பேணும் நடவடிக்கையாக முகவுறை அணிதலைக் கட்டாயமாகக் கொண்டிருப்பின் அவ்விதி பேணப்படவேண்டும்.

வீட்டிலிருந்தபடி பணி

இதுவரை வாய்ப்பிருப்பின் வீட்டிலிருந்து பணியாற்ற சுவிஸ் நடுவனரசு வேண்டுகை விடுத்திருந்தது. இதனைத் திரும்பப்பெற்றுக்கொண்டுள்ள சுவிசரசு முன்மொழிவாக மாற்றி உள்ளது. அதுபோல் கட்டாய நோய்த்தொற்றுப் பரிசோதனை எனும் விதியும் நீக்கப்படுகின்றது.

உணவகங்கள்

மீண்டும் விரும்பியபடி விருந்தினர்கள் இருக்கையில் இருக்கலாம். இத்தனை ஆட்கள் மட்டும் இருக்கலாம் எனும் வரம்பு நீக்கப்படுகின்றது. உள்ளரங்களில் கட்டாயம் இருந்தபடியே உண்ண வேண்டும் எனும் விதி தொடர்ந்தும் தொடர்கின்றது. விருந்தினர்கள் குழுக்களாக வருகை அளிக்கும்போது உரிய இடைவெளியினைப் பேணவேண்டும்.

குழுவிற்கு ஒருவர் தனது தரவுகளை விருந்தினர் நிரலில் பதிவுசெய்துகொண்டால் போதும் எனவும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளரங்கில் மேசையில் இருக்கும்வரை முகவுறை அணிதல் கட்டாயம் எனும் விதியும் தொடர்கின்றது.

பெருநிகழ்வுகள்

பெருநிகழ்வுகள் நடைபெறும்போது மகுடநுண்ணித் தொற்றுச்சான்றிகள் காண்பிக்கும் விருந்தினர்கள் தொகை வரம்பின்றி நிகழ்வில் பங்கெடுக்கலாம். ஆட்கள் தொகை வரம்பு இவ்வாறான நிகழ்விற்கு நீக்கப்படும். இப்போதே 10’000 வரை ஆட்கள் பெருநிகழ்வில் பங்கெடுக்கலாம். உரிய காப்பமைவு வரையும் ஆட்கள் சோதனை முறைமையும் கடைப்பிடிக்கப்படவேண்டும்.

1000 ஆட்களுக்கு மேல் பங்கெடுக்கும் நிகழ்விற்கு மாநில அரசு உரிய ஒப்புதலை அளிக்க வேண்டும். பொருட்காட்சி நிகழ்வுகளுக்கு ஆட்தொகை வரையறை நீக்கப்படுகின்றது. மகுடநுண்ணித் தொற்றுச்சான்றிதழ் அல்லாத பொதுநிகழ்வுகள் ஆயிரம் ஆட்களுக்கு உட்பட்டு நடைபெறலாம்.

ஆட்கள் இருக்கையில் இருக்காது அசைந்து நகர்வார்களாயின் உள்ளரங்கில் ஆகக்கூடியது 250 ஆட்களும் பொதுத்திறந்த வெளியில் 500 மக்களும் பங்கெடுக்கலாம். மகுடநுண்ணி தொற்றுச்சான்றிதழ் இல்லாத நிகழ்வுகளில் நடனமாடுதல் அல்லது இசைக்கச்சேரி தடைசெய்யப்படுகின்றது.

தனியார் நிகழ்வுகள்

உள்ளரங்கில் தனியார் விழாக்களில் 30 ஆட்களும் பொதுவெளியில் 50 ஆட்களும் பங்கெடுக்கலாம்.

கடைகள், பொழுதுபோக்கு நிலையம், விளையாட்டுத்திடல் இவ்விடங்களின் கொள்ளளவிற்கு ஏற்ப ஆட்கள் நுழையலாம். நீர்நிலைப்பூங்காவும் மீளத் திறந்துகொள்ளலாம். இவ்விடங்களில் பொது நிகழ்வுகள் நடைபெற்றால் மகுடநுண்ணித் தொற்றுச் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.

சான்றிதழ் இல்லாத நிகழ்வாயின் இடத்தின் கொள்ளவில் 3ல் 1பகுதி ஆட்களே நுழையலாம்.

ஆற்றுதி

பண்பாட்டு மற்றும் விளையாட்டு செயல்களில் துறைசாரா மற்றும் துறைசார் வீரர்கள் முகவுறை அணியத் தேவையில்லை. இங்கு இடைவெளி பேணவேண்டிய கட்டாயத்தில் விலக்கு அளிக்கப்படுகின்றது. உள்ளரங்கில் பங்கெடுப்போர் தகவல்கள் பதியப்பட வேண்டும்.

உயர் பாடசாலை

நேரில் வகுப்பிற்குத் தோற்றும் மாணவர் உச்சவரம்புத் தொகை என்பது நீக்கப்படுகின்றது. இங்கும் நோய்த்தொற்று பரிசோதனைக் கட்டாயம் எனும் விதி விலக்கப்படுகின்றது.

நடனவிடுதி

நடனவிடுதிகள் மீண்டும் திறக்கப்படலாம். ஆனால் தடுப்பூசி இடப்பட்ட சான்று அல்லது நோயிலிருந்து தேறிய சான்று அளிக்கப்பட வேண்டும். முகவுறை அணிய வேண்டும்.

பயணம்

செங்கென் நிலப்பரப்பில் உள்ள நாடுகளுக்குத் தனிமைப்படுத்தல் கட்டாயத்தில் இருந்து நீக்கப்படுகின்றது. தடுப்பூசி இட்டுக்கொள்ளாமல் விமான வழியில் பயணம் மேற்கொள்வோருக்கு மட்டும் நோய்த்தொற்று சோதனை முறை கடைப்பிடிக்கப்படும். சுவிற்சர்லாந்து அரசு அமெரிக்கா, அல்பேனியா மற்றும் சேர்பியா நாடுகளில் இருந்து சுவிசிற்குள் நுழைய விதித்திருந்த தடையினை நீக்கிக்கொள்கின்றது.

மறையிடர் நிரல்

சுவிற்சர்லாந்து நலவாழ்வு (சுகாதார அமைச்சு) நடுவனரசு மடையிடர் நிரலில் உள்ள நாடுகளின் தொகையினை குறைத்துள்ளது. பெருந்தொற்று இடர் நேரலாம் என ஐயப்படும் சில நாடுகளின் அல்லது நிலப்பரப்புக்களின் நிரலை நாளும் புதுப்பித்துக்கொள்கின்றது.

ஆனாலும் இந்த மறையிடர் (றிஸ்க்) நிரலில் உள்ள நாடுகளைச் சார்ந்தோர் உரிய தடுப்பூசியினை முழுமையாக இட்டுக்கொண்டாலும், நோய்த்தொற்றிலிருந்து முழுமையாகத் தேறி நலமைடந்திருந்தாலும் நோய்ப்பரிசோதனை மேற்கொள்ளாமலும், தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளாமலும் சுவிசிற்குள் நுழையலாம்.

இவ்வாறான சூழலில் இல்லாதோர் உயிரியல் தொடர்வினை (பி.சி.ஆர்) பரிசோதனை செய்துகொண்டு மட்டுமே சுவிசிற்குள் நுழையலாம் மற்றும் அவர்கள் தம்மை குறித்த நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டப்படுவர்.

தடுப்பூசி காப்புக்காலம்

சுவிற்சர்லாந்து அரசினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு இடப்படும் தடுப்பூசிகளின் காப்புக்காலத்தினை சுவிஸ் அரசு 12 மாதங்களாக அறிவித்துள்ளது. இக்காலத்திற்குத் தடுப்பூசிப் பயனாளர்கள் கட்டுப்பாடுகள் அற்று விமானப் பயணம் செய்யலாம், தம் தரவுகளைப் பதிவுசெய்வதிலிருந்தும், தனிமைப்படுத்தலிலிருந்து இக்காலத்திற்கு விலக்கு அளிக்கப்படுகின்றது.

அதுபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிக்கு அமையத் தொற்றுக்கு ஆளாகித் தேறியவர்களுக்கும் 6 மாத காலத்திற்கு மேற்காணும் விலக்குகள் அளிக்கப்படும். பயணத்தின்போது விரைவு நோய்ப்பரிசோதனை செல்லுபடி காலம் 24 மணிநேரம் என உள்ளது, இதனை 48 மணிநேரமாக சுவிஸ் அரசு அதிகரித்துள்ளது.

Previous articleகர்ப்பிணி மனைவியை கிறிகட் மட்டையால் அடித்தே கொன்ற கொடூரன்!
Next articleதமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6162 பேருக்கு கொரோனா!