கொள்கைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது,கோத்தாவின் உரை பயனற்றது!

சுபீட்சமாக எதிர்கால கொள்கைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி ஒருபோதும் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். ஆகவே ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் ஆற்றும் உரை பயனற்றதாகவே கருதப்படும்.

தேசியத்திற்கு முரணாக அரசாங்கம் செயற்படுகிறது. நாட்டை பிற தரப்பினருக்கும் விற்கும் கொள்கைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்குள் நாடு இருக்குமா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

பொறுப்பற்ற வகையில் அரசாங்கம் செயற்படுமாயின் மகாசங்கத்தினரை ஒன்றினைத்து வீதிக்கிறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடவும் அஞ்சபோவதில்லை என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக செயற்பட்டது. அக்காலக்கட்டத்தில் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் காரணமாகவே நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆட்சி மாற்றத்தினால் அரச சுகபோகங்கள் கிடைக்கப் பெறும் என்று கருதி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.

பலமான தலைமைத்துவத்தின் ஊடாக நாடு முன்னெற்றமடையும் என எதிர்பார்த்தோம்.எமது எதிர்பார்ப்பு தவறு என்பதை தற்போது உணர்ந்துக் கொண்டுள்ளோம்.

அரசாங்கம் மீதான நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிந்து விட்டது. ஆனால் நாட்டு மக்கள் அரசாங்கம் மீது கொண்ட நம்பிக்கை இல்லாமல் போவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

உர பற்றாக்குறையினால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகளுக்கு தேவையான உரத்தை இலவசமாக வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தில் உரத்தை அதிக விலைக்கு கூட பெற முடியாத நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது.

விவசாயிகளின் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். இல்லாவிடின் அவர்களுடன் ஒன்றினைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படும். ஆளும் தரப்பினர் உறுப்பினர்கள். அடுத்த தேர்தலில் மக்கள் மத்தியில் வாக்கு கேட்டு செல்ல தயாராக வேண்டாம்.

சுபீட்சமான எதிர்கால கொள்கைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. பஷில் ராஜபக்ஷ வந்தவுடன் எரிபொருள் விலை குறைவடையும் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

அவ்வாறின் எரிபொருள் விலையேற்றத்தை அரசியல் சூழ்ச்சி என்றே கருத வேண்டும். நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை ஜனாதிபதி புரிந்துக் கொள்ள வேண்டும்.

தேசியத்திற்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் வானில் தோன்றும் சூரியனையும், நிலவையும் கூட விட்டு வைக்கமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தேசிய வளங்கள் பிற நாட்டவர்களுக்கு விற்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. தவறை திருத்திக் கொண்டு அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட வேண்டும். இல்லாவிடின் மகா சந்கத்தினரை ஒன்றினைத்து அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்கி போராடுவோம் என்றார்.